திங்கள், மே 07, 2012

ஜாமீன் வழங்குவதில் சட்டவிதிகளை மீறக்கூடாது: உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

புதுடெல்லி:கொலை போன்ற கொடிய குற்றங்கள் சுமத்தப்படும் நபர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் உயர்நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக நடந்துகொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தில் கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்றம், அவர்களை கீழ் நீதிமன்றம் முன்பாக சரணடையுமாறும்
, அவ்வாறு சரணடையும்போது அவர்களுக்கு தகுதியிருப்பதாக கருதினால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்குமாறு கீழ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கொலையுன்டவரின் சகோதரி ரஷ்மி ரேகா தட்டோய் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன்பாக வந்தது. விசாரணையின் முடிவில் உயர்நீதிமன்ற ஆணையை ரத்துச் செய்து உச்சநீதிமன்ற பெஞ்ச் கீழ்கண்டவாறு தீர்ப்பளித்தது:
ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் அவசியமானதுதான். எனினும் ஜாமீன் அளிக்கும்போது சட்ட விதிகளை நீதிமன்றங்கள் மீற முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே இயங்க முடியும் என்பதை நீதிமன்றங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எதை நேரடியாக செய்ய முடியாது, எதை மறைமுகமாக செய்ய முடியாது என்பதை சட்டம் தெளிவாக விளக்கியுள்ளது.
சட்ட அதிகாரத்தை பயன்படுத்தும்போது வரையறுக்கப்பட்ட நான்கு சுவர்களுக்கு உள்ளிருந்து மட்டுமே நீதிமன்றத்தால் செயல்பட முடியும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரணடையும்போது அவர்களுக்கு தகுதியிருந்தால் நிபந்தனைகளுடன் ஜாமீன் அளிக்குமாறு உயர் நீதிமன்றங்கள் முந்தைய காலங்களில் உத்தரவிட்டதாக தெரியவில்லை. ஜாமீன் வழக்கில் மேல் நீதிமன்றங்கள் இது போன்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தெரியவில்லை.
முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுக்கும்போது, கைது நடவடிக்கையை தவிர்க்கும் விதமான பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இந்த வழக்கில் சட்ட விதிகளும், முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட மேற்கோள்களும் மீறப்பட்டுள்ளன.
நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்க முடியாது. இடைக்கால உத்தரவை மட்டுமே வழங்க முடியும். அதுவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டே இடைக்கால உத்தரவை வழங்க முடியும்.
சரணடைபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூறும் உத்தரவு சட்டப்படி செல்லாது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதோடு, கீழ் நீதிமன்றங்களின் அதிகாரங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன’ என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
குர்பக்ஷ் சிங் சிப்பியா (1980) மற்றும் சாவித்ரி அகர்வால் வழக்குகளை இத்தீர்ப்பில் உச்சநீதிமன்ற பெஞ்ச் மேற்கோள்காட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக