செவ்வாய், மே 22, 2012

சபாநாயகர் மீரா குமார் – 35 மாதங்களில் 29 வெளிநாட்டு பயணங்கள்!

புதுடெல்லி:மக்களவை தலைவரான மீரா குமார் பதவியேற்று 35 மாதங்களில் 29 வெளிநாட்டு பயணங்களை நடத்தியுள்ளார். தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால் அளித்த மனுவிற்கு கிடைத்த பதிலில் சபாநாயகரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த எம்.பிக்கள் மற்றும் மக்களவை செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நடத்திய வெளிநாட்டு பயணங்களுக்கு செலவான மொத்த தொகை கிட்டத்தட்ட 10 கோடி ரூபாயாகும். சுவிட்சர்லாந்திற்கு இவர்கள் அதிகமாக பயணித்துள்ளார்கள். இண்டர் பார்லிமெண்டரி யூனியனின் பணிகளுக்காக மட்டும் அவர்கள் 4 தடவை சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்கள்.
அமெரிக்கா, டிரினாட் அண்ட் டொபாக்கோ, இலங்கை, ஐஸ்ல் ஆஃப் மேன் மற்றும் ஸ்வாசிலாந்த் ஆகிய நாடுகளுக்கு 5 முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார் மீரா குமார்.
மொத்த பயணச்செலவு 9.89 கோடி ரூபாய். விருந்தினருக்கு அளித்த பரிசுப்பொருட்களின் மதிப்பு 11.66 லட்சம் ஆகும்.
வரவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்த ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக