திங்கள், மே 21, 2012

பயணிகளிடம் வசூலித்த 395 கோடி ரூபாய் ஏர் இந்தியாவின் பாக்கெட்டில்!

புதுடெல்லி:வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் பயணிகளிடம் வசூல் செய்யும் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு செல்வதில்லை. அவை நேராக ஏர் இந்தியாவுக்கு செல்கிறது. இவ்வகையில் ஏர் இந்தியா அரசுக்கு செலுத்தவேண்டிய பாக்கித் தொகை 395 கோடி ரூபாய் ஆகும்.
வட்டி உள்பட மீதித்தொகை தற்பொழுது 454 கோடியாக உயர்ந்துள்ளதாம். வரித்தொகையும் சேர்த்தே பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்களிடம் இருந்து வசூலிக்கும் தொகையை அரசு கஜானாவுக்கு செலுத்தாமல் இதர தேவைகளுக்காக மாற்றுவது குற்றகரமானது என்பது ஒரு புறமிருக்க, ஏர் இந்தியாவின் வரி பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரசு அறிவித்துள்ள நிதியுதவி கிடைக்கும் வேளையில் ஏர் இந்தியாவின் வரி பாக்கியை அடைத்துவிடுவோம் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகின்றனர். பைலட்டுகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக ஊக்கத்தொகைகள் வழங்குதல்(incentives), இதர ஏர்லைன்சுகளில் பணியாற்றும் பைலட்டுகளுக்கும் சம்பளம் வழங்குதல் போன்ற பொருளாதார முறைகேடுகளை ஏர் இந்தியா நடத்திவருவதாக விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது.
மக்களிடம் வசூலிக்கும் பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்தாமல் முறைகேடாக ஏர் இந்தியா நிர்வாகம் பயனபடுத்தியுள்ளது.
அதேவேளையில் ஏர் இந்தியா பைலட்டுகள் கடந்த எட்டாம் தேதி துவக்கிய போராட்டம் நேற்று 13-வது நாளை எட்டியுள்ளது. 16 சர்வீஸ்களில் ஏழு சர்வீஸ்கள் மட்டுமே ஏர் இந்தியா நடத்தி வருகிறது. போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்றும், பைலட்டுகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கோரிக்கை விடுக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதர விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை அதிகரித்துள்ளன.
போயிங் 787 ட்ரீம் லைனர் பயிற்சி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக கடந்த எட்டாம் தேதி விமானிகள் போராட்டத்தை துவக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக