டெல்லி: நடப்பு நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மாபெரும் சரிவாகும்.ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களால் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. முன்னதாக இந்தக் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 5.3 சதவீதம் அளவுக்கு தேய்ந்துவிட்டது.
மேலும் 4வது காலாண்டில் வேளாண்துறையில் உற்பத்தி 1.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி -3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
2011-12ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது 2010-11ம் நிதியாண்டை விட 1.9 சதவீதம் குறைவாகும்.
நடப்பு காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியிலேயே இருக்கும் என்று தெரிகிறது.
பங்குச் சந்தை பெரும் சரிவு:
பொருளாதார வளர்ச்சி சரிவு விவரம் வெளியானதையடுத்து இன்று இந்திய பங்குச் சந்தைகளும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 54 புள்ளிகள் குறைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்த இந்தியா, இப்படி 5.3 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக