திங்கள், மே 21, 2012

குடியரசு தின விழா பரேடில் நடிகர், நடிகைகள் டான்ஸ்... மத்திய அரசு முடிவு!

டெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் நடிகர், நடிகைகளையும் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இந்திய சினிமாத் துறைக்கு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி திரைத் துறையைக் கெளரவிக்கும் வகையில் இந்த முடிவாம்.

இந்தியாவின் குடியரசு தின விழாவின்போது டெல்லியில் கண் கவர் அணிவகுப்பு நடைபெறும். முப்படைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் அணிவகுப்பாக இது இருக்கும். மேலும் பல்வேறு மாநிலங்களின் கலை, கலாச்சாரத்தை, வளர்ச்சியை விளக்கும் வகையில் ரதங்களும் இதில் இடம் பெறும்.
இந்த அணிவகுப்பில் இதுவரை சினிமாக்காரர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். அவர்களையும் சேர்த்தால் அணிவகுப்பின் கெளரவம் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவில் இருந்தது மத்திய அரசு.
ஆனால் தற்போது முதல் முறையாக சினிமாக்காரர்களையும் இந்த அணிவகுப்பில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய திரைத்துறைக்கு 100 வயதாகிறது. இது அடுத்த ஆண்டு வருகிறது. இதையடுத்து 2013ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் திரைத்துறையினரையும், அதாவது நடிகர், நடிகைகளையும் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாம் மத்திய அரசு.
இதில் இந்தி சினிமாக்காரர்கள் மட்டுமே பங்கேற்பார்களா அல்லது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரும் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. அனேகமாக பாலிவுட் எனப்படும் இந்திய சினிமாவைச் சேர்ந்த நடிகைகள், நடிகர்களை மட்டுமே இந்த பேரணியில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் பேசும் படம் எனப்படும் ராஜா ஹரிச்சந்திரா என்ற படம் 1913ம் ஆண்டு மே 3ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக