சனி, மே 26, 2012

சவூதியில் இந்திய அதிகாரிகள் கைது செய்த பீகார் முஸ்லிம் எஞ்சீனியரின் கதி என்ன?

Fasih Mahmoodபுதுடெல்லி:தீவிரவாத தொடர்பு குற்றம் சாட்டி சவூதி அரேபியாவில் இருந்து கைது செய்யப்பட்டார் என இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கூறப்படும் பீகார் முஸ்லிம் எஞ்சீனியர் ஃபஸீஹ் மஹ்மூத் என்ன ஆனார் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. இம்மாதம் 13-ஆம் தேதி சவூதி அரேபியாவின் ஜுபைலில் ஒரு வீட்டில் வைத்து சவூதி போலீசும், ஐ.பியும் இணைந்து ஃபஸீஹை விசாரிப்பதற்காக எனக்கூறி கஸ்டடியில் எடுத்தனர்.

சிவிலியன் உடையில் வந்த சவூதி-இந்திய அதிகாரிகள் வீட்டை சோதனைப் போட்டனர். மொபைல் ஃபோன் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றினர். இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்புடன் ஃபஸீஹிற்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தியா கோரிக்கை விடுத்தால் ஃபஸீஹை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என அதிகாரிகள் தெரிவித்ததாக ஃபஸீஹின் மனைவி நிகத் பர்வீன் கூறுகிறார்.
கைது செய்யப்பட்ட ஃபஸீஹை குறித்து அறிய இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டபொழுது எவ்வித பலனும் இல்லை. கணவனைக் குறித்து தகவல் அறிய டெல்லிக்கு வந்த நிகத் சவூதி தூதரகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றை அணுகிய பொழுது அவர்கள் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.
இதனிடையே 11 தினங்களாக ரகசிய முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஃபஸீஹ் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதிலும் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சவூதி நம்பரில் இருந்து அவர் அழைத்தபோதிலும் அவர் அங்குதான் இருக்கின்றாரா? என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
உள்துறை அமைச்சகத்திற்கும், பீகார், கர்நாடகா மாநிலங்களுக்கும் இந்தியாவில் சவூதி தூதரகத்திற்கும் இதுத்தொடர்பாக அவரது உறவினர்கள் புகார் அளித்த போதிலும் எவ்வித பலனுமில்லை. தங்களின் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லையெனில் நீதிமன்றத்தை அணுக உள்ளார்கள் ஃபஸீஹின் குடும்பத்தினர்.
கர்நாடாகா மாநிலம் பட்கலில் எஞ்சீனியரிங் பட்டப்படிப்பும், நேசனல் தெர்மல் பவர் கார்ப்பரேசனில் பயிற்சியும் முடித்த பிறகு மும்பையில் ஹெச்.பி.சி.எல்லில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் சவூதி நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு சென்றார் ஃபஸீஹ். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஃபஸீஹ் சவூதியில் எஞ்சீனியராக பணியாற்றி வருகிறார் அவர். கடந்த ஆண்டு ஃபஸீஹிற்கு திருமணம் நடந்தது. தனது மனைவி நிகத்தை அவர் கடந்த மார்ச் மாதம் சவூதிக்கு அழைத்துச் சென்றார்.
பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியம், ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள பர் ஸமைலா கிராமத்தில் இருந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தாம் 29 வயதான ஃபஸீஹ்.
பர் ஸமைலா கிராமத்தின் மதிப்புமிக்க நபரும், டாக்டருமான ஃபிரோஸ் அஹ்மத், ஃபஸீஹின் தந்தை ஆவார்.
இந்திய முஜாஹிதீன் உறுப்பினர்கள் என குற்றம் சாட்டி பீகாரின் இச்சிறு கிராமத்தில் இருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. முன்பு உ.பியின் ஆஸம்கர் முஸ்லிம்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டிருந்தனர். முஸ்லிம் இளைஞர்களின் தொடர் கைது பர் ஸமைலா கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 6-ஆம் தேதி கர்நாடகா-ஆந்திரா மாநில போலீசார் இக்கிராமத்தில் நுழைந்து கஃபீல் அக்தர் என்ற இளைஞரை கைது செய்தனர். இச்சம்பவம் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. மாநில அரசுக்கு தெரியாமல் கைதுச்செய்த நடவடிக்கையை முதல்வர் நிதீஷ்குமார் கண்டித்திருந்தார். இக்கிராமத்தைச் சார்ந்த கதீர் அஹ்மத் சித்தீகி, கவ்ஹர் அஸீஸ் குமைனி ஆகியோர் ஏற்கனவே டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இக்கிராமம் தற்பொழுது பீதி வயப்பட்டுள்ளது.
கல்வி கற்ற முஸ்லிம் இளைஞர்கள் இக்கிராமத்தில் குறிவைத்து கைது செய்யப்படுவதைத் தொடர்ந்து உ.பியின் ஆஸம்கரைப் போல இக்கிராமத்தையும் தீவிரவாத தொடர்பு கிராமமாக மாற்ற சதி நடப்பதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக