கெய்ரோ:எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும், முபாரக் ஆட்சியின் இறுதிகாலக்கட்ட பிரதமருமான அஹ்மத் ஷஃபீக்கின் அலுவலகம் அடையாளம் தெரியாத நபர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம்
நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முபாரக் ஆட்சியின் மிச்ச சொச்சமாக கருதப்படும் ஷஃபீக் 2-வது கட்டத் தேர்தலில் போட்டியிடுவார் என தேர்தல் கமிஷனின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை துவக்கினர்.
தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரியா, தகாஹிலியா, மன்சூரா ஆகிய மாகாணங்களில் ஷஃபீக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. கெய்ரோவில் போராட்டம் துவங்கிய உடனேயே இஃவான் வேட்பாளர் முஹம்மது முர்ஸி ஆதரவாளர்களுடன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். சில இடங்களில் முர்ஸிக்கு எதிராகவும் போராட்டம் நடந்தன.
முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்ட அப்துல் ஃபத்தாஹும், அம்ர் மூஸாவும் 2-வது கட்ட தேர்தலில் இருவரையும் ஆதரிக்கமாட்டோம் என கூறியுள்ளனர். ஆனால், முதல் கட்ட தேர்தலில் அப்துல் ஃபத்தாஹிற்கு ஆதரவு தெரிவித்த ஸலஃபிகளின் அந்நூர் கட்சி முர்ஸிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஷஃபீக்கின் வேட்பாளர் தகுதியைக் குறித்து கேள்வி எழுப்பி தொடரப்பட்ட வழக்கில் உச்ச அரசியல் சாசன நீதிமன்றம் ஜூன் 11-ஆம் தேதி தீர்ப்பு கூறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக