திங்கள், மே 21, 2012

என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டம்-நடராஜன் அவசர வழக்கு

சென்னை: என்னை போலியான என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறி ஒரு மனுவை சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சசிகலாவின் கணவர் நடராஜன் தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் மத்திய மண்டல ஐஜியான அலெக்சாண்டர் மோன், சரக டிஐஜி அமல்ராஜ் மற்றும் 13 காவல்துறை அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் கைதான நடராஜன் தற்போது ஜாமீனி்ல் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்து நீதிபதி நசீர் முகம்மதுவிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில்,
தஞ்சாவூர் போலீசார் தவறான புகாரின் பேரில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்தவர் தற்போது வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனால் போலீசார் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டனர்.

என்னை போலி என்கவுண்ட்டர் மூலம் கொலை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருச்சி சிறைக்கு என்னை வேனில் கொண்டு செல்லும்போது வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டில் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து என்கவுண்டர் நடத்த திட்டமிட்டனர்.

எனவே நான் குற்றம் சாட்டியுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் நடராஜன்.

இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக