செவ்வாய், மே 29, 2012

இத்தாலியில் கடும் நிலநடுக்கம்: 8 பேர் பலி

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு தெருக்களை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த பல கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே இம்மாதம் 20-ம் தேதி 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாயினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக