ஞாயிறு, மே 27, 2012

மன்மோகன்சிங் மீது ஹஸாரே குழு ஊழல் புகார்!

புதுடெல்லி:பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் 13 மத்திய அமைச்சர்கள் மீது அன்னா ஹஸாரே குழு ஊழல் புகாரை சுமத்தியுள்ளது.
நிலக்கரி அமைச்சகம் மன்மோகன் சிங் வசம் இருந்தபோது ஊழல் நடந்ததாக ஹஸாரே குழு குற்றம் சாட்டுகிறது. இதற்கு மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் ஆதாரமாக காட்டுகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சுயேச்சையான சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் ஊழல் செய்ததாக ஹஸாரே குழு இதுவரை குற்றம்சாட்டியது கிடையாது. முதன்முறையாக இப்போதுதான் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர், பிரணாப் முகர்ஜி தவிர, மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், மு.க. அழகிரி, ஜி.கே. வாசன், சரத் பவார், எஸ்.எம். கிருஷ்ணா, கமல்நாத், பிரஃபுல் படேல், பரூக் அப்துல்லா, கபில் சிபல், சல்மான் குர்ஷித், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், வீரபத்திர சிங் ஆகியோர் மீதும் விசாரணை நடத்தவேண்டும் என ஹஸாரே குழு கோருகிறது.
ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, சாந்திபூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று(சனிக்கிழமை) செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை வெளியிட்டனர்.
ஹஸாரே குழுவினரின் புகாருக்கு பதிலளித்துள்ள காங். செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ‘நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இவ்வாறு கூறுவது இது முதல் முறையல்ல. கேஜ்ரிவாலால் நடத்தப்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியை முறையாகக் கையாளவில்லை என்று புகார் கூறி ஹஸாரேக்கு கிரண் பேடி கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை குற்றச்சாட்டுக்கு ஆளானவர் முதலில் மறுக்கட்டும்’ என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக