வியாழன், மே 31, 2012

ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த அதிகாரியை கார் ஏற்றி கொல்ல முயற்சி !

ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த அதிகாரியை கார் ஏற்றி கொல்ல முயற்சி
 நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி பன்னீர் செல்வத்துக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் பன்னீர் செல்வம், துணை தாசில்தார் அப்துல்மன்னார், வருவாய் ஆய்வாளர்கள் ராதா கிருஷ்ணன், செய்யதலி ஆகியோர் ஒரு ஜீப்பில் முளகுமூடு மெயின் ரோட்டுக்கு சென்றனர்.

ஜீப்பை டிரைவர் நாகராஜன் ஓட்டினார். அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரேஷன் அரிசி கடத்திய கார் வேகமாக வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் பாய்ந்து சென்றது. 

உடனே அதிகாரிகள் ஜீப்பில் ஏறி காரை விரட்டினர். காட்டாத்துறை அருகே காரை முந்திச் சென்று மறிக்க ஜீப் வேகமாக சென்றது. அப்போது காரில் இருந்தவர்கள் ஜீப்பை இடித்து விட்டு தப்பினர். இதில் நிலைதடுமாறிய ஜீப் ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. 

ஜீப்பின் முன் இருக்கையில் இருந்த மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி பன்னீர் செல்வம் மற்றும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பன்னீர்செல்வம் தலையில் அடிபட்டதால் அவர் சுயநினைவை இழந்தார். 

உடனடியாக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்துல்மன்னார், ராதாகிருஷ்ணன், செய்யதலி, நாகராஜன் ஆகியோர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். 

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக