சனி, மார்ச் 04, 2017

தம்பதியிடையே மோதல் வலுத்தது : தீபா பேரவையில் இருந்து கணவர் திடீர் விலகல் !

சென்னை: தீபாவுக்கும், அவர் கணவர் மாதவனுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. தீபா தொடங்கிய பேரவையை விட்டு விலகுவதாக அவரது கணவர் மாதவன் அறிவித்துள்ளதால் அவரை நம்பிய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் ஆரம்பம் முதல் குழப்பம் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களாக தீபா நடவடிக்கை பிடிக்காமல் அவர் இல்லத்துக்கு செல்வதை ஆதரவாளர்கள் தவிர்த்துள்ளனர். இதனால் தி.நகரில் உள்ள தீபா இல்லம் வெறிச்சோடி கிடக்கிறது. தீபா  பேரவையில் இணைய அதிமுக முன்னாள் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் பலர் தயாராக உள்ளனர். இருப்பினும், அரசியல் முடிவெடுப்பதில் தீபா திணறுவதால் அவரை நம்பி களத்தில் இறங்க அதிமுக முக்கிய புள்ளிகள் தயக்கம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வளசரவாக்கத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் தீபா ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீபா ஆதரவு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மீதுள்ள அதிருப்தியில் பெரும்பாலான நிர்வாகிகள் புறகணித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தீபா வெளியிட்டதாக கூறி வாட்ஸ் அப்பில் ஒரு அறிக்கை  நேற்று வைரலாக பரவியது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் வெளியான அந்த அறிக்கையில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் தலா 8 மாவட்டங்கள் அடங்கிய 4 மண்டலமாக பிரித்து அதற்கான பொறுப்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. 

அதில் தீபா கையெழுத்து இல்லை. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பொறுப்பாளர் நியமனத்தில் தீபாவுக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. தீபா தன்னை நம்பாமல் வீட்டில் உள்ள சில வெளியாட்களை நம்பி அரசியல் செய்வதாக மாதவன் குற்றம்சாட்டியுள்ளார். அதன்படி தீபா வெளியில் செல்லும்போது கணவர் மாதவனை அழைத்து செல்வதில்லை. அவர் டிரைவர் ஏ.வி.ராஜாவைத்தான் அழைத்து செல்கிறார். ராஜா தற்போது கார் ஓட்டுவதில்லை. அவருக்கு பதில் புதிய டிரைவரை தீபா நியமித்துள்ளார். அரசியலில் இறங்கிய சில நாட்களிலேயே தீபா குடும்ப சண்டை சிக்கி தவிப்பது அவர் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே பொறுப்பாளர் நியமனம், கட்சி தொடங்காதது, சுற்றுப்பயணம் செல்லாதது என தீபா மீது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் கணவன், மனைவி இடையே நிலவும் சண்டையால் ஆதரவாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை திரைமறைவில் நடந்து வந்த குடும்ப சண்டை நேற்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி தீபா கணவர் மாதவன் தன் மனைவி மீதுள்ள அதிருப்தியை வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். அதில் அவர், ‘‘கடந்த 3 மாதமாக நான் தீபாவுடன் இருந்து தொண்டர்களை சந்தித்து வந்தேன். இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுத்து வந்தோம். தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை தீபா சந்தித்தது, பேரவை தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது எதுவுமே எனக்கு தெரியாது. 

அவை அனைத்தும் தீபாவின் தனிப்பட்ட செயல்பாடு. பொறுப்பாளர் பட்டியலில் உள்ள ஒருவரை கூட எனக்கு தெரியாது. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். தனித்து செயல்பட்டாலும் சிறப்பாக செயல்படுகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கையில்  ஈடுபட மாட்டேன். எனக்கும், பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தீபா நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றார். மாதவனின் இந்த அதிரடி முடிவால் அவரை நம்பியிருந்த ஏராளமான ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவின் கணவர் என்ற முறையில் ஆரம்பத்தில் மாதவனைத்தான் ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வந்தனர். பேரவையின் பெயர் வெளியிடும்போதும் அவர் கூடவே இருந்தார். ஆனால் தற்போது பேரவையில் இருந்து அவர் வெளியேறியிருப்பது  தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக