ஞாயிறு, மார்ச் 05, 2017

கிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு !

கோலாலம்பூர்: கிம் ஜாங் நம் கொலை விவகாரத்தில் மலேசிய அரசின் விசாரணையை விமர்சித்த வட கொரிய தூதரை, இரண்டு நாளில் வெளியேறும்படி மலேசியா உத்தரவிட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதாரர் கிம் ஜாங் நம், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த மாதம் 13ம் தேதி படு கொலை செய்யப்பட்டார். அவர் மீது வி.எக்ஸ் ரசாயணம் ஸ்பிரே செய்யப்பட்டதாக மலேசியாவின் தடயவியல் சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதை வடகொரியா ஏற்கவில்லை. அந்நாட்டின் தூதர் காங் சோல் கூறுகையில், ‘‘வி.எக்ஸ் ரசாயணத்துக்கு வாய்ப்பில்லை. அது பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை ஸ்பிரே செய்தவர்களுக்கும், விமான நிலையத்தில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்’’ என கருத்து தெரிவித்திருந்தார். மலேசிய அரசின் விசாரணையை விமர்சித்தற்கு வடகொரியா மன்னிப்பு கேட்க வேண்டும் என வடகொரியா தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு எந்த பதிலும் வராததால், வட கொரிய தூதர் காங் சோல், 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மலேசிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக