ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் 4-வது மிகப்பெரிய வங்கியான பேங்கியா திவாலாகிவிட்டது.இந்நிலையில் அரசிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் கோடி (19 மில்லியன் யூரோ) நிதியுதவியைக் கேட்டுள்ளது அந்த வங்கி. முன்னதாக வங்கி கடனில் மூழ்கி வருவதை அறிந்த ஸ்பெயின் அரசு இரு வாரங்களுக்கு முன்பு சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்து, வங்கியை பகுதியாக தேசியமயமாக்கப்பட்ட
வங்கி என அறிவித்தது. இந்நிலையில் அந்த வங்கி அரசிடம் மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்நிலையில் ஸ்பெயின் அரசுக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது கடன்களைத் திருப்பி அளிக்க நிதியுதவி வேண்டுமென்று கட்லோனியா மாகாண அரசும் கோரிக்கை விடுத்துள்ளது.முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸில் கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டது. பட்ஜெட் பற்றாக்குறை, பொதுக் கடனால் அந்த நாட்டு அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வங்கித்துறை மூலம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வீடு, கட்டுமானத் துறைக்கு அதிக அளவில் கடன் அளித்ததன் மூலம் வங்கி திவாலாகிவிட்டது. வங்கியை மீட்க எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் அந்நாட்டு பங்குச் சந்தையில் இருந்தும் பேங்கியா வங்கி தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள இப்பிரச்னை தொடர் நிகழ்வாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் மேலும் சிலவற்றிலும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக