வியாழன், மே 31, 2012

ஃபஸீஹ் மஹ்மூத் மர்ம காவல் குறித்த விபரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு !

Fasih Mahmoodபுதுடெல்லி:தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து சவூதி-இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் கஸ்டடியில் வைக்கப்பட்டிருக்கும் பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் குறித்த விபரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ஜுபைலில் தனது வசிப்பிடத்தில் வைத்து இம்மாதம் 13-ஆம் தேதி ஃபஸீஹ் கைது செய்யப்பட்டார். மர்மமான முறையில் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ள ஃபஸீஹ் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில் ஃபஸீஹ் குறித்த விபரங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி நிகத் பர்வீன் சமர்ப்பித்த மனுவில் நீதிபதிகளான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், டெல்லி, பீகார், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மீண்டும் நடைபெறும். சவூதி அரேபியா அரசின் உதவியுடன் இந்திய உளவுத்துறை கைது செய்த ஃபஸீஹ் எங்கிருக்கிறார் என்பதை குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி நிகத்தின் வழக்கறிஞர் நவ்ஷாத் அஹ்மத் கான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஃபஸீஹ் குறித்து விபரங்களை கேட்டு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளை அணுகிய பொழுதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று நவ்ஷாத் நீதிமன்றத்தில் கூறினார்.
ஃபஸீஹிற்கு எதிராக உடனடியாக இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு கைது செய்ய முயற்சி நடக்கும் வேளையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஃபஸீஹை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத சூழலில் சட்ட நடவடிக்கைகளை அவரது உறவினர்கள் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து கைது செய்வதற்கான நடவடிக்கையை புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஃபஸீஹ் குறித்து விசாரித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் சி.பி.ஐ தலைவர் ஆகியோரை கண்டபொழுதும் எவ்வித தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக நிகத் கூறுகிறார்.
கர்நாடகா மாநிலம் பட்கலில் உள்ள கல்லூரியில் இருந்து பொறியாளர் பட்டத்தை பெற்றதும், பீகாரின் ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சார்ந்தவர் என்பதும் ஒருவரை கைது செய்ய தக்க காரணங்கள் அல்ல. ஃபஸீஹ் மீது சுமத்திய குற்றச்சாட்டை வெளியிடவேண்டும் என்றும், எங்கே காவலில் வைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவது எங்களது உரிமை என்றும் நிகத் கூறினார்.
கடந்த சில மாதங்களாக பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பர்ஸமைலா கிராமத்தில் இருந்து தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்யப்படும் 14-வது முஸ்லிம் இளைஞர் தாம் ஃபஸீஹ் என்று டெல்லியில் சட்ட உதவிகளை மேற்கொண்டுவரும் அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக