மொரீனா(மத்தியபிரதேச மாநிலம்):மத்திய பிரதேச மாநிலத்தில் மணல் மாஃபியாக்களின் அட்டூழியம் தொடருகிறது. போலீஸ்காரர் ஒருவர் லாரி ஏற்றி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎஸ் அதிகாரி நரேந்திர குமார் கொல்லப்பட்ட மூன்று மாதத்திலேயே மணல் மாஃபியாக்கள் மீண்டும் ஒரு படுகொலையை நடத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் நதியில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அங்கிருந்து 4 லாரிகளில் மணல் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்களை வாகனத்தில் துரத்தினர். லாரிகள் ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் நுழைந்ததால், அங்குள்ள போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் போலீஸார் இருவர் பைக்கில் லாரியை விரட்டிச் சென்றனர். போலீஸார் துரத்துவதை அறிந்ததும் மணல் கொள்ளையர்கள் லாரிகளை வெவ்வேறு இடங்களுக்குத் திருப்பினர்.
இதனால் கடைசியாகச் சென்ற லாரியை போலீஸார் பைக்கில் தொடர்ந்து விரட்டிச் சென்று தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது லாரியை வைத்து பைக்கை இடித்துத் தள்ளினர். இதனால் பைக்கில் இருந்த போலீஸார் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக