இஸ்லாமாபாத்:உஸாமா பின்லேடனை கொலைச்செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுக்கு உதவியதாக கூறப்படும் டாக்டருக்கு பாகிஸ்தானில் 33 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உஸாமாக் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கு டாக்டர் ஷகீல் அப்ரிதி ஆபோட்டாபாதில் போலி தடுப்பூசி முகாம் நடத்தியதன் மூலம் தேசத்துரோக
குற்றம் இழைத்ததாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
ரகசியமாக வெளிநாட்டு உளவு அமைப்பிற்கு உதவியை ஒப்புக்கொள்ள இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. உஸாமாவை கொலைச் செய்ததாக அமெரிக்கா அறிவித்த உடனேயே தேசத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய வழக்கில் அப்ரிதி கைது செய்யப்பட்டார்.
கைபர் மாவட்டத்தில் பழங்குடியினர் நீதிமன்றம் அப்ரிதி குற்றம் செய்தார் என்பதை கண்டுபிடித்துள்ளதால் 3500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சி.ஐ.ஏவிற்கு உதவ அப்ரிதி, டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்தார் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா கடந்த ஜனவரியில் தெரிவித்திருந்தார்.
அப்ரிதியை கைது செய்த உடன் அவரை விடுதலைச் செய்யக்கோரி அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் அறிக்கை விட்டார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் விருப்பங்களை அப்ரிதி பாதுகாத்தார் என ஹிலாரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக