திங்கள், மே 28, 2012

கொலைவெறி மணிக்கு கொலைக்கார மோடி கண்டனம்???!!!

Modi condemns CPI(M) 'politics of murders'புதுடெல்லி:கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை துவக்கி செயல்பட்டு வந்த டி.பி.சந்திரசேகரன் என்பவர் மார்க்சிஸ்ட் தீவிரவாதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கேரள மாநிலம்
தொடுபுழாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் இடுக்கி மாவட்ட செயலாளர் எம்.எம்.மணி என்பவர் தனது உரையில், ‘கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தனது எதிரிகளை தீர்த்துக் கட்டிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.’ என வெறித்தனமாக பேசினார். இவரது பேச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை முகத்தை மேலும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய வரலாறு காணாத அளவுக்கு கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச்செய்து, பல பெண்களை மானபங்கப்படுத்தி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பல்கள் நடத்திய கோரத்தாண்டவத்திற்கு தலைமைத் தாங்கிய கொலைக்கார முதல்வரான நரேந்திர மோடி எம்.எம்.மணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது மிகப்பெரிய நகைச்சுவையாக மாறியுள்ளது.
மோடி இதுக்குறித்து கூறுகையில், ‘மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலர் எம்.எம். மணி, தங்களது கட்சியின் எதிரிகளை ஒழித்துக் கட்டியுள்ளது குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவார் எனில், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தேசிய மனித உரிமை ஆணையம் எங்கே போயிற்று? இத்தகைய செயல்களுக்கு எதிராக நமது குரலை நாம் உயர்த்த வேண்டும். மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா? கேரள அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? அவரது பேச்சு பயங்கரவாதிகளான மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் குரல் போல் ஒலிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
மோடியின் கண்டனத்திற்கு பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரப் பிள்ளை கூறுகையில், ‘எம்.எம்.மணியின் பேச்சுக் குறித்து பதிலளிக்க மோடிக்கு தகுதியில்லை. மோடி மற்றும் அவரது கட்சியைக் குறித்து அனைவருக்கும் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார்.
கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து அவசரமாக கூட்டப்பட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், நியூட்டனின் 3-வது விதி என்று வெறித்தனமாக முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலைக்கு தூண்டுகோலாக அமைந்த மிகப்பெரிய பயங்கரவாதியாக திகழும் மோடி, எம்.எம்.மணியின் கொலைவெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க அணு அளவும் தகுதியில்லை என்பதுதான் அனைவரின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக