பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே குழுவினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதிலும் நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஊழல் நடந்ததாக, அத்துறையின் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
தனது 3 நாள் மியான்மர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அன்னா குழுவினரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும் ‘உண்மைகளை ஆராயாமல் பொறுப்பற்ற முறையில், நிலக்கரித் துறையில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருப்பது துரதிருஷ்டவசமானது. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலக நான் தயார். என்னுடைய பொது வாழ்க்கையில் நான் நிதி அமைச்சராகவும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கிறேன். என்னுடைய பொது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத்தான் விளங்கி வருகிறது’ என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக