சனி, மே 26, 2012

எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!

கெய்ரோ:முப்பது ஆண்டுகள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுக் கட்டிய மக்கள் புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கி நகரும் எகிப்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்று வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் முதல் கட்ட முடிவுகள் இஸ்லாமியவாதிகளான இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

தேர்தலில் தங்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி முன்னணி வகிப்பதாகவும், அதிபரை தேர்வுச் செய்வதற்கான அடுத்தக்கட்ட தேர்தலில் அவர் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக்குடன் போட்டியிடுவார் என இஃவான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளராக எகிப்து அதிபர் தேர்தலில் முர்ஸி போட்டியிடுகிறார். இவரைத் தவிர பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 12 பேரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக காலதாமதம் ஆகும். செவ்வாய் கிழமைக்கு முன்பு முடிவுகளை வெளியிட தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளது. மொத்தம் பதிவான 90 சதவீத வாக்குகளும் எண்ணப்பட்ட பொழுது முதலிடத்தில் முஹம்மது முர்ஸியும், 2-வது இடத்தில் அஹ்மத் ஷஃபீக்கும் உள்ளனர் என தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தெரிவிக்கின்றன.
25 சதவீத வாக்குகள் முர்ஸிக்கும், 23 சதவீத வாக்குகள் ஷஃபீக்கிற்கும் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் 90 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபொழுது தங்களது வேட்பாளர் முர்ஸி முன்னிலை வகிப்பதாகவும், இறுதி கட்ட தேர்தலுக்கு தயாராகுவதாகவும் இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்தது.
இஃவானில் இருந்து வெளியேறி அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ் 20 சதவீத வாக்குகளை பெற்று 3-வது இடத்திலும், டிக்னிடி கட்சியின் ஹம்தீன் ஸபாஹி 19 சதவீத வாக்குகளை பெற்று 4-வது இடத்திலும், முன்னாள் அரபு லீக் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 11.6 சதவீத வாக்குகளைப் பெற்று 5-வது இடத்திலும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக