வியாழன், மே 24, 2012

வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை மன்னிக்க வேண்டும்-சங்மா !

 டெல்லி: வெளிநாட்டுப் பெண் என்று தான் கூறியதற்காக தன்னை சோனியா காந்தி மன்னிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு களத்தில் குதித்துள்ள முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து விட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள சங்மா இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் சங்மாவுக்கு இப்போதைக்கு சோனியா காந்தியின் கதவு திறக்காது என்றே கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸும், பாஜகவும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவசரம் அவசரமாக தான் போட்டியிடப் போவதாக சங்மா அறிவித்தார். அதை விட படு வேகமாக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சங்மாவை ஆதரித்துக் குரல் கொடுத்தனர். மேலும் தொலைபேசி மூலமாக சங்மாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் ஜெயலலிதா. டெல்லிக்கும் போகப் போகிறார்.

இந்த நிலையில், சங்மா ஒரு பெரிய பல்டி அடித்துள்ளார். அதாவது சோனியா காந்தி தன்னை மன்னிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஒரு காரணம் உண்டு.

1999ம் ஆண்டு சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுப் பெண், அவர் இந்தியப் பிரதமர் பதவியில் அமர ஆசைப்படக் கூடாது என்று முதல் முறையாக கூறி பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியவர். அப்போது அவர் காங்கிரஸில் இருந்தார். இதை சரத் பவாரும், தாரிக் அன்வரும் ஆமோதித்தனர். பின்னர் இந்த மூவரும் காங்கிரஸிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸை நிர்மானித்தனர்.

சங்மா அப்போது எழுப்பிய இந்த வெளிநாட்டுப் பெண் என்ற எதிர்ப்புக் குரல்தான் சோனியா காந்தி, பிரதமர் பதவியில் அமர முடியாமல் போனதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூட கூறலாம். இதை சோனியா காந்தி இந்த விநாடி வரை மறக்கவில்ல.

இந்த நிலையில், இதுகுறித்து சற்றும் கவலைப்படாமல், வெட்கப்படாமல், சோனியா காந்தியை சந்தித்து தான் போட்டியிடுவதற்கு ஆதரவு தருமாறுகோர விரும்பினார் சங்மா. சோனியாவை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தார். ஆனால் சந்திக்க மறுத்து விட்டார் சோனியா.

மேலும் சரத் பவாரும், தாரிக் அன்வரும் கூட சங்மாவின் ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டனர். இதனால் சங்மா சற்றே ஆடிப் போயுள்ளார். இருப்பினும் காங்கிரஸின் ஆதரவைப் பெற பழங்குடியினர் என்ற கார்டை களம் இறக்கியுள்ள அவர், சோனியா தன்னை மன்னிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்து தடாலடியாக பேசியுள்ளார்.

இவரது இந்த பகிரங்க மன்னிப்பு கோரிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக