சனி, ஏப்ரல் 21, 2012

பிரதமரின் தலையை வெட்டித் துண்டாடத் திட்டமிட்டேன்: ப்ரீவிக்


ஒஸ்லோ: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீதிமன்ற வளாகம் பொது மக்களால் நிறைந்திருந்தது.
2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறையில் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணை ஐந்தாம் நாளாகத் தொடர்ந்தது. 


தன்னுடைய படுகொலைகளுக்கான முன்னாயத்தங்கள் குறித்து 33 வயதான ப்ரீவிக் விபரிக்கும்போது, "ஐந்து வருடங்களுக்கு முன் என்னைக் காணும் எவரும், என்னை ஒரு சாதாரண, மனிதாபிமானமும் நட்புணர்வும் கொண்ட ஒருவன் என்றே கூறுவார். அந்த அளவுக்கு நான் ஒரு சாதாரண நபராகத்தான் இருந்தேன். ஆனால், அந்த இயல்பான நிலையை மாற்றி என்னைக் கொடுமனம் கொண்டவனாய் மாற்றிக்கொள்ள நான் மிகக் கடுமையான பயிற்சி எடுத்துக் கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"என்னுடைய தாயாரைச் சந்தித்துவிட்டு என் இருப்பிடம் திரும்பியபின் தினமும் சுமார் 16 மணிநேரம் கணனியில் 'வார் கேம்ஸ்' விளையாடுவேன். அதன்பின்னர், என் ஆழ்மனதில் உள்ள மனிதாபிமான உணர்வைக் கிள்ளியெறிந்து, அரக்கத்தனமான வெறியுணர்வை வளர்க்கும் வகையில் தியானத்தில் ஈடுபட்டேன். ஒரு குண்டை வெடிக்கச் செய்ய ஒரு விசையை அழுத்துவது மிக இலகுவானது. ஆனால், ஆயுதமேந்தி மனிதர்களைக் கொன்றுகுவிப்பது மிக மிகக் கஷ்டமான ஒரு செயலாகும். நான் என்னுடைய இயந்திரத் துப்பாக்கியுடன் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளச் சென்றபோது, 'ப்ரீவிக், வேண்டாம்! அதைச் செய்யாதே!' என்று என் தலைக்குள் 100 குரல்கள் ஒருங்கிணைந்து கூச்சலிட்டன" என்று ப்ரீவிக் வாக்குமூலம் அளித்தார்.

"ஒடோயா தீவில் கூடியிருந்த 564 பேரையும் கொன்றுகுவிக்க வேண்டும் என்பதே என் இலக்காக இருந்தது. கூடியிருந்த ஐந்தாறு பேரைச் சுட்டுக் கொன்றபோது, மற்றவர்கள் சிதறி ஓடக்கூட முடியாமல் கல்லாய் உறைந்துபோய் நின்றதைக் கண்டபோது எனக்கே பெரும் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால், ஆப்கானில் நிலைகொண்டுள்ள நோர்வே இராணுவ வீரர்கள் எப்படித் தமது உணர்ச்சிகளைப் புதைத்துவிட்டு செயற்படுகிறார்களோ, அதுபோலவே நானும் செயல்பட்டேன்." என்று ப்ரீவிக் கூறியபோது, நீதிமன்றத்தில் குழுமியிருந்தோரில், மேற்படி படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் விம்மியழும் சத்தம் கேட்டது.

"நோர்வேயில் கலாசாரப் பன்மைத்துவத்தையும் குறிப்பாக, முஸ்லிம் குடியேற்றத்தையும் அனுமதிக்கும் அரசியல்வாதிகளே என்னுடைய முக்கிய தாக்குதல் இலக்கு என்ற வகையில், முன்னாள் நோர்வே பிரதமரும் தேசத்தின் தாய் என்று அழைக்கப்பட்டவருமான க்ரோ ப்ரன்ட்லண்ட்டின் தலையை வெட்டித் துண்டாட நினைத்திருந்தேன்" என்று ப்ரீவிக் தயக்கமின்றி உரைத்தபோது, நீதிமன்றம் அதிர்ச்சியில் உறைந்தது.

பயங்கரமான படுகொலைத் தாக்குதல்மூலம் 77 அப்பாவிப் பொதுமக்களைப் பலியெடுத்ததோடு, "எதிர்காலத்தில் ஐரோப்பாவை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்தும் வகையில், மேலும் படுகொலைகளைச் செய்யவும் தயங்கமாட்டேன்" என்று பகிரங்கமாக அறிவித்துள்ள ப்ரீவிக், "இந்த நீதிமன்றம் ஒன்றில் எனக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் அல்லது என்னை விடுதலை செய்யவேண்டும்" என்று அதிரடியாகக் கூறியுள்ளமை நீதிமன்றத்தில் கூடியிருந்தோரைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

ப்ரீவிக்கின் கூற்றுப்படி, தீவிரவாதச் சிந்தனை கொண்ட ஒரு குழு நோர்வேயில் செயற்பட்டுவருவதாகவும், வெகு விரைவில் இரண்டு பாரிய தாக்குதல்களை நோர்வே மக்கள் சந்திக்க வேண்டிவரும் என்றும் தெரியவந்துள்ளது.

தீவிர முஸ்லிம் வெறுப்புடைய வலதுசாரிக் கடும்போக்காளரான ப்ரீவிக்கின் மனநிலை சீராகவே இருக்கிறது என மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், சமூகத்தின் அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழும் ப்ரீவிக்கிற்கு நோர்வே சட்டத்தில் வழங்கிவரும் உச்சபட்ச 21 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாகத் தண்டனைக் காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீவிக் தனக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும், நோர்வே சட்டக்கோவையில் மரண தண்டனை முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக