திங்கள், ஏப்ரல் 23, 2012

பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக வசிக்கும் கிராமம்


பஞ்சாப் மாநிலத்தில் ஆண், பெண் விகிதாச்சார இடைவெளி அதிகளவில் இருக்கும் நிலையில் அங்குள்ள கிராமம் ஒன்றில் ஆண்களைவிட முக்கால் பங்கு அதிகமாக பெண்கள் உள்ளனர்.  
 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில்தான் பாலின விகிதாச்சாரம் கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவிலேயே இந்த இரண்டு மாநிலங்களில்தான் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 893 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதாச்சாரம் காணப்படுகிறது.  
 
ஆனால் பஞ்சாபில் ஒரே ஒரு கிராமம் மட்டும் பெண்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. ஆம். இங்கு ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம். தலைநகருக்கு அருகே உள்ள பிஜ்லிபூர் என்ற கிராமத்தில்தான் பெண்கள் ஆதிக்கம் காணப்படுகிறது.
 
இந்த கிராமத்தில் மொத்தம் 700 பேர் வசிக்கின்றனர். அவர்களில் முக்கால்வாசி பேர் பெண்கள் ஆவர். பிஜ்லிபூர் உள்ளாட்சி நிர்வாகம் அரசுக்கு அளித்துள்ள தகவலில் இந்த கிராமத்தின் பாலின விகிதாச்சாரம் 1:1.8 என அதாவது ஆயிரம் ஆண்களுக்கு 1800 பெண்கள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
இதனால் மீடியாக்களின் பார்வை இந்த கிராமத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த கிராமத்தைப் பற்றி சிறப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இங்கு அங்கன்வாடி நடத்தி வரும் சுரிந்தர் கவுர் (வயது28) என்ற பெண் கூறுகையில் இங்குள்ளவர்கள் அனைவரும் படித்தவர்கள். பெரும்பாலானோர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். முக்கியமாக இங்கு பெண் சிசுவை கொல்வது பாவமாக கருதப்படுகிறது. எனவே கடந்த 10 ஆண்டுகளில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் அதிகம் பிறந்துள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக