வெள்ளி, ஏப்ரல் 20, 2012

சியாச்சினிலிருந்து படைகளை வாபஸ் பெற சரியான தருணம்: பாக்.,


இஸ்லாமாபாத்: சியாச்சின் பனிமலைப் பிரதேசத்திலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்கள் படைகளை வாபஸ் பெற இதுவே சரியான தருணம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த யோசனையை இந்தியா வரவேற்றுள்ளது.

உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என கருதப்படுவது சியாச்சின் மலைப்பிரதேசம். இங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்கள் எல்லையை பகிர்ந்து கொள்வதால், இரு நாட்டு படைகளும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 7ம் தேதி, பனிச்சரிவில் சிக்கி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 139 பேர் பலியானர்கள். அங்கு மீட்பு பணிகள் தற்போதும் நடந்து வருகின்றன. சம்பவ இடத்தை பாக்., அதிபர் சர்தாரி, ராணுவ தளபதி கயானி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது கயானி கூறுகையில், இந்தியா பாகிஸ்தான் நாடுகள் தங்களது படைகளை சியாச்சின் பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். பனி படர்ந்த இப்பிரதேசத்தில் ராணுவ பணிகளுக்கு செலவிடும் தொகையை, இருநாடுகளும் தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கயானி கூறியிருந்தார். தற்போது கயானியின் பேச்சை வழிமொழிந்துள்ள பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சியாச்சின் பனிமலைப் பிரதேசத்திலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்கள் படைகளை வாபஸ் பெற இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளது.

இந்தியா வரவேற்பு: சியாச்சின் பகுதியிலிருந்து இருநாட்டு படைகள் வாபஸ் பெறவேண்டும் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ கூறுகையில், சியாச்சின் பகுதியில் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து பாகிஸ்தான் தற்போது உணர்ந்துள்ளதை தான் வரவேற்பதாக தெரிவித்தார். இருநாட்டு படைகள் குவிப்பால் ஏற்படும் பொருளாதார செலவை, தத்தம் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்றும் பல்லம் ராஜூ தெரிவித்தார்.

முன்னாள் கேப்டன் எதிர்ப்பு: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ராணுவத்தின் இந்த பேச்சுக்களை நம்ப வேண்டாம் என சியாச்சின் போர்க்கள ஹீரோ என்றழைக்கப்படும் கேப்டன் பானா சிங் பிவிசி தெரிவித்துள்ளார். இவர் கடந்த 1987ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவிய போது, அவர்களின் ஊடுருவலை வெற்றிகரமாக தடுத்து, தனது திறமைக்காக பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக