புதுடெல்லி:லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி 4 ஆண்டுகள் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணனை பா.ஜ.க கைவிட்டது. சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இத்தண்டனை என்று பா.ஜ.க சமாளிக்கிறது. கட்சிக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் மேலும் கூறுகையில், “பங்காரு லட்சுமணன் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே லஞ்சம் வாங்கியுள்ளார். இவ்வழக்கில் தண்டனையை வாங்கிக்கொடுப்பதில் சி.பி.ஐ கவனம் செலுத்தியது. இதுபோலவே சுதந்திரமான விசாரணை நடவடிக்கைகளை இதர வழக்குகளிலும் சி.பி.ஐ மேற்கொள்ளவேண்டும். அப்பொழுது காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பெரும் ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறைச் செல்வதை அப்பொழுது காணலாம்.
எவ்வளவு பொதுச்சொத்து கொள்ளையடிக்கப்பட்டது என்பதை அப்பொழுது தெரியவரும். ஆகையால் நேர்மையைக் குறித்து எங்களுக்கு காங்கிரஸ் பாடம் கற்றுத்தர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
நேர்மை, தேசப்பற்று என கூறி ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் பா.ஜ.கவின் உண்மையான முகம் பங்காரு லட்சுமணனுக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது.
ஊழலைக் குறித்து பேசும் தார்மீக உரிமையை பா.ஜ.க இழந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஷித் ஆல்வி தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒரு தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் சிறைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அவர்கள் சுய மதிப்பீடுச் செய்யட்டும். காங்கிரஸ் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை. அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கைதான் தகர்ந்துள்ளது என்று ராஷித் ஆல்வி மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக