புதன், ஏப்ரல் 18, 2012

தேசத்தைக் காக்க மீண்டும் படுகொலைகள் செய்வேன்:ப்ரீவிக் !

ஒஸ்லோ: அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் படுகொலை வழக்கு இன்று (17.04.2012) இரண்டாவது நாளாக  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கைவிலங்குகள் அகற்றப்பட்ட நிலையில், வலதுசாரிகள் பாணியில் கரத்தை உயர்த்தியபடி நீதிமன்றத்துக்குள் பிரவேசித்தார், ப்ரீவிக்.இரட்டைப் படுகொலைத் தாக்குதல்களில் ஈடுபடுமுன் சயசரிதை பாணியில் அவர் எழுதியிருந்த 1500 பக்கக் கட்டுரையில், தன்னுடைய வழக்கு விசாரணை, தனது தீவிர வலதுசாரிக் கருத்துக்களை உலகுக்கு எடுத்துரைக்கும் மேடையாக அமையும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த
வகையில், அவரது படுதீவிரமான துவேஷக் கருத்துக்கள் பரவலடைவதைத் தவிர்க்கும் வகையில், இந்த வழக்கு எந்த ஓர் ஊடகத்திலும் நேரடி ஒளி/ஒலிபரப்புக்கு உட்படுத்தப்பட அனுமதிக்கப்படவில்லை.


2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறை ஒன்றில் நாட்டின் இடதுசாரிக் கட்சியினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த விழாவில் கலந்துகொள்வதற்காகக் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் செயல், முழு உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.


இப்பயங்கரவாதக் குற்றச்செயல் குறித்த இரண்டாவது நாள் விசாரணையின்போது, "என்னுடைய செயல் நன்மையை அடிப்படையாகக் கொண்டதே தவிர, கொடுஞ்செயல் அல்ல" என்று ப்ரீவிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கலாசாரப் பன்மைத்துவத்தையும் முஸ்லிம்களையும் மிகத் தீவிரமாக வெறுக்கும் ப்ரீவிக், "எதிர்காலத்தில் நோர்வே மக்கள் தமது சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறும் அபாயம் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் படுகொலைகளைச் செய்தேன்" என்று தான் மேற்கொண்ட படுகொலைகளை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.


"இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் இனியும் ஈடுபடுவீர்களா?" என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "என்னுடைய நாட்டு மக்களின் நலனைக் காப்பதற்காக நான் மீண்டும் படுகொலைகளைச் செய்யத் தயங்கமாட்டேன்" என்று அழுத்தம் திருத்தமாக ப்ரீவிக் தெரிவித்துள்ளார்.
ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணைக்காக ஆரம்பத்தில் ஐந்துபேர் கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. எனினும், மேற்படி இரட்டைப் படுகொலைச் சம்பவம் குறித்து, "இந்த மாதிரியான பயங்கரவாதச் செயலுக்கு வழங்கத் தக்க ஒரே தண்டனை மரணதண்டனை மட்டுமே!" என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்திட்டார் என்ற காரணத்தினால், நீதிபதி தோமஸ் இன்ட்ரபோ விசாரணைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.


நோர்வே நாட்டின் குற்றவியல் சட்டப்படி குற்றவாளிகள் எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக