ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

தமிழகத்தின் 5 நகரங்களில் இட ஒதுக்கீடு கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று பிரம்மாண்ட போராட்டம்!

சென்னை:தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் வெகுஜன மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் முஸ்லிம்கள் நடத்தும் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

தமிழகத்தின் சென்னை, நெல்லை,மதுரை, தஞ்சாவூர்,கோவை ஆகிய முக்கிய நகரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் பிரம்மாண்டமான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் ஆகியவற்றில் வலுப்பெறுவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவும், தமிழகத்தில் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திடக் கோரியும் இன்று(ஏப்ரல்22) தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் பெருவாரியான முஸ்லிம்கள் கலந்துகொள்ளும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.
இப்போராட்டத்தில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்றைய போராட்டத்தை நடத்துகிறது:
1.முஸ்லிம்களை மூன்று பிரிவாக பிரித்து அதில் 39.3 சதவீதம் முஸ்லிம்கள் மட்டுமே இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்ற நிலையை மாற்றி இந்தியாவில் வாழும் 100 சதவீதம் முஸ்லிம்களும் இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே பிறப்பிக்க வேண்டும்.
2.மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் தான் மலைவாழ் மக்களைவிட பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகம் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கோரவேண்டும்.
3.மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திட வேண்டும்.
இன்று ஏப்ரல் 22ல் தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை தொலை தூரத்தில் வசிக்க கூடியவர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்களும் காண வேண்டும் என்ற அடிப்படையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக