ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

பங்காரு திகார் சிறையில் அடைப்பு!

டெல்லி:2001-ம் ஆண்டு போலி ஆயுத பேர ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

2001-ல் பங்காரு லட்சுமணன் மத்திய அமைச்சராக இருந்தபோது, தெஹல்கா இணையதளம் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் நடவடிக்கையில், ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டார். அதற்கு கைமாறாக அவர்கள் கூறிய நிறுவனத்துக்கு ராணுவத்துக்கான தெர்மல் பைனாகுலர் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தைத் தருவதாக உறுதியளித்தார். இந்தச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே ரகசிய கேமராவில் பதிவுச் செய்யப்பட்டது. இச்சம்பவம் ஏற்படுத்திய பெரும் சர்ச்சையில் பங்காரு, தனது கட்சி தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்தார். இதுத்தொடர்பான வழக்கில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் பங்காருவை குற்றவாளி என அறிவித்து 4 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
நேற்று(சனிக்கிழமை) நண்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றம் கூடியதும் நீதிபதி கன்வ்ல்ஜித் அரோரா, பங்காரு லட்சுமணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தயவு காட்டுமாறு லட்சுமண் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை நீதிபதி நிராகரித்தார். அவரை சிறையிலடைக்குமாறு போலீஸூக்கு உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதி தனது 14 பக்க அறிக்கையில் கூறியதாவது:
நீதியின் தேவை நிறைவேற்றப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் 9 வது விதியின்கீழ் பங்காரு லட்சுமணன் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும், ரூ. 1 லட்சம் அபராதமும் அவர் கட்ட வேண்டும்.
“என்ன நடந்தாலும் சரி, பரவாயில்லை – போகட்டும் பாவம்!” என்கிற மனப்பாங்கு முடிவுக்கு வந்தாக வேண்டும். ஊழல் குற்றவாளிகள் விஷயத்தில் நீதிமன்றங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். தண்டனையின் அளவைக் கூட்டுவதன் மூலம் இது சாத்தியமாகும். நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமல்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.
அரசியல்ரீதியான ஊழல், அரசியல் அமைப்புகளைப் பலவீனப்படுத்துகிறது. அதனால் சமூகத்தை ஆட்சி செய்யும் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பாதிக்கிறது. நமது நாட்டில் நிகழும் குற்றச்செயல்கள் நமது நம்பிக்கையை தகர்ப்பதால், மிகுந்த நெருடலை உண்டாக்குகின்றன” என்றார் நீதிபதி.
முன்னதாக பங்காரு நீதிபதிக்கு விடுத்த வேண்டுகோளில், “எனக்கு உடல்நலக் கோளாறுகள் உள்ளன. 2 முறை இதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, எனது தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும்” என கோரினார்.
ஆனால், சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பத்மினி சிங், இந்த வேண்டுகோளை ஏற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் அதிகபட்ச தண்டனை தர வேண்டுமென அவர் கோரினார்.
அப்போது பங்காரு லட்சுமணன் சார்பில் ஆஜரான சுனில் குமார், தனது கட்சிக்காரர் தனது 40 ஆண்டுப் பொது வாழ்க்கையில் எந்தத் தவறும் செய்ததில்லை; அவர் மீது எந்த குற்ற வழக்கும் இதுவரை போடப்பட்டதில்லை. எனவே, தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என வாதிட்டார். ஆனால், இவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் திகார் அறைக்கு பங்காருவை அழைத்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக