திங்கள், ஏப்ரல் 23, 2012

ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்படுங்கள்: அரசு ஊழியர்களுக்கு பிரதமர் ஊக்கம் !

புதுடெல்லி:முடிவுகள் எடுப்பதில் துணிச்சலுடன் செயல்படுங்கள் என்று அதிகாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பழிவாங்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகள் தினத்தை’ முன்னிட்டு டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: சில விஷயங்கள் தவறாகிவிட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில்
முடிவெடுப்பதை தாமதப்படும் மனப்பான்மையை அதிகாரிகள் கைவிட
வேண்டும். அரசு அதிகாரிகள் தீர்க்கத்துடன் செயல்படுவதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையிலான நிர்வாகச் சூழலை ஏற்படுத்தவே அரசு முயல்கிறது.  அரசு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் நேர்மையானதாகவும், குறிக்கோளுடையதாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் தலைமை யார் என்பதைப் பொருத்து அதிகாரிகளின் முடிவு அமைந்திருக்கக் கூடாது. நேர்மையான சூழலில் பணியாற்றும் போது எதிர்பாராமல் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலும் அந்த அதிகாரிகளை அரசு பாதுகாக்கவே செய்யும்.  கடந்த காலங்களில் இருந்ததைப் போல அரசு அதிகாரிகளிடம் ஒழுங்கு இல்லை. அவர்களுக்கு வெளியிலிருந்து அழுத்தங்கள் வருகின்றன என்ற பேச்சும் உண்டும்.  இது மிகைப்படுத்தப் பட்டதாக இருக்கலாம். ஆனால் அவர்களிடம் உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
நூறு சதவீதமும் ஆபத்தையே எதிர்நோக்காத அதிகாரவர்கத்தை நம்மால் அமைக்கமுடியாது. சட்டத்துக்கு உட்பட்டு துணிச்சலான முடிவுகளை எடுக்கும் வகையில் நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.  முடிவுகளையே எடுக்காத அதிகாரிகள் எந்தப் பிரச்னைகளுக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் முடிவில் நாட்டுக்கும், சமூகத்துக்கும் அவர்களால் எந்த நன்மையும் ஏற்பட்டிருக்காது.
ஊழலை எதிர்க்கும் வகையில் அரசு நிர்வாகத்தை புதுப்பிக்கவும், சட்ட விதிமுறைகளை வகுக்கவும் அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிகாரிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் நாடு நுழையும் நேரத்தில், வளர்ச்சியின் பலன் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையிலான சமுதாயத்தை அமைக்க பாடுபட வேண்டும் என்று பிரதமர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக