புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக ராம்தேவ்-ஹஸாரே குழுவினர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. ராம் தேவ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக அன்னா ஹஸாரே குழுவினரில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். அன்னா ஹஸாரேவும் ராம்தேவும் வெள்ளிக்கிழமை புது டெல்லி அருகே குர்காவுனில் சந்தித்துப் பேசிய பின்பு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
பேட்டியின் போது, வரும் மாதங்களில் தொடர்ச்சியாக இருவரும் தனியாகவும் இணைந்தும் பல போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்தனர்.
மே 1-ல் ஷீரடியிலிருந்து யாத்திரை தொடங்குவார் ஹஸாரே. அதே நாள் ராம்தேவ், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து தனது போராட்ட யாத்திரையைத் தொடங்குவார் என்று அவர்கள் கூறினர். ஆனால் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றித் தங்களுக்கு முன்பே தெரிவிக்கப்படவில்லை என்று ஹஸாரே குழுவினர் கூறினர். மேலும், ராம்தேவுடன் இணைந்து போராட்டங்கள் நடத்துவதில் ஹஸாரே குழுவினரில் சிலர் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
ராம்தேவின் பதஞ்ஜலி யோகபீடம் மீதும் அவரது உதவியாளர் பாலகிருஷ்ணா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து போராட்டத்தை நடத்துவதில் ஹஸாரே குழுவினரில் ஒரு சிலர் ஆட்சேபிப்பதாகத் தெரிகிறது.
ஆயினும் ராம்தேவின் போராட்டங்களுக்கு ஹஸாரே ஆதரவு தெரிவித்தால் யாருக்கும் அதில் ஆட்சேபம் இல்லை. சில விஷயங்களைக் குறித்துப் பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு நடந்த சந்திப்புக்குப் பின்னர், திடீரென்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியதற்கு ஹஸாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக ஹஸாரே குழுவினர் புதுதில்லியையடுத்த நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து பேச இருக்கின்றார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக