செவ்வாய், ஏப்ரல் 24, 2012

நார்வே:இந்திய தம்பதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் இந்தியா வந்தன


புதுடெல்லி:பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு நார்வே காப்பகத்திலிருந்த அனுரூப் தம்பதிகளின் குழந்தைகள் இன்று இந்தியா வந்தன.
குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி உணவு கொடுத்தது மற்றும் கையால் உணவு ஊட்டியது உள்ளிட்ட சில சுகாதார குறைபாடுகளை  காரணம் காட்டி, இந்திய தம்பதியரின் குழந்தைகள் அபியான் மற்றும் ஐஸ்வர்யா  ஆகியோரை தங்களது பராமரிப்பில் வைத்துக் கொண்டது நார்வே அரசு.

கடந்த ஓர்  ஆண்டாக குழந்தைகள் நலத்துறையின் பராமரிப்பில் இருந்த இக்குழந்தைகளை தங்களிடம்  ஒப்படைக்க குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெடிய போராட்டத்தை மேற்கொண்டனர்.
இப்பிரச்னையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும்  நேரடியாக தலையிட்டு, நார்வே அரசுடன் பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த முயற்சியின் பயனாக அக்குழந்தைகள் இரண்டும் இன்று இந்தியா  திரும்பினர்.
நார்வேயில் இருந்து டெல்லி விமானம் நிலையம் வந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள்  உள்பட உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர். இந்திய குழந்தைகள் மீண்டும்  தாயகம் திரும்பியதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நார்வே அரசுக்கு நன்றியும்  தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இந்தியா திரும்பியது குறித்து கருத்து தெரிவித்த அவர்களின் தந்தை அனுரூப் பட்டாச்சார்யா; “குடும்பத்துடன் குழந்தைகள் ஒன்றுசேர்ந்துவிட்டனர்.  இப்போதுதான் நிம்மதியாக உள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக