ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

வெளிநாட்டு மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளுடன் கரம் கோர்க்கும் இந்திய மாவோயிஸ்டு தீவிரவாதிகள்

சென்னை: ஒன்றரை மாதங்களாக மாநில அரசுகளை பதற வைத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் அமைப்பானது துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு மாவோயிஸ அமைப்புகளுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதாகவும் தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்திருப்பதாகவும் மத்திய அரசின் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா கடத்தல்கள்

ஒடிசாவின் கந்தமால் மாவட்ட எல்லையில் மார்ச் 14-ந் தேதியன்று மாவோயிஸ்டுகளின் இந்த ஆண்டுக்கான கடத்தல் கணக்கு தொடங்கியது. கிளாடியோ மற்றும் போசுஸ்கோ ஆகிய இத்தாலியர்களை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள் வழக்கம்போல தங்களது இயக்கத்தின்ரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன்பின்னர் ஏப்ரல் 12ந் தேதி ஒருவரையும் மார்ச் 25-ந் தேதி மற்றொருவரையும் பல சுற்றுப் பேச்சுகளின் பின்னர் மாவோயிஸ்டுகள் விடுதலை செய்தனர். மாவோயிஸ்டுகளின் பிடியில் இத்தாலியர் ஒருவர் இருந்த நிலையில் கோரபுட் மாவட்டம் லக்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜினா ஹிகாவை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். இதனால் அந்த மாநிலத்தில் பரபரப்பு அதிகரித்தது. மொத்தம் 33 நாட்கள் அவரை சிறைபிடித்து வைத்திருந்த மாவோயிஸ்டுகள் ஏப்ரல் 26-ந் தேதிதான் அவரை விடுதலை செய்தனர்.

சத்தீஸ்கர் கடத்தல்

இதனிடையே கடந்த ஏப்ரல் 21-ந் தேதியன்று அதாவது ஒடிசாவில் எம்.எல்.ஏ. மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்தபோதே பக்கத்து மாநிலமான சத்தீஸ்கரில் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.

சுக்மா மாவட்டமானது ஒரிசா, ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளால் மாவட்ட ஆட்சியர் வினில் குமார் கடத்தப்பட்ட மல்காங்கிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிதான் சுக்மா. முழுவதும் வனப்பகுதியான இது தண்டகாருண்ய மற்றும் தண்டேவடா காடுகள் என அழைக்கப்படுகிறது. ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனைக் கடத்தியுள்ள மாவோயிஸ்டுகள் தங்களது இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் 17 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

1554 கடத்தல்கள்

இத்தகைய கடத்தல் சம்பவங்கள் என்பது மாவோயிஸ்டுகளுக்கு புதிது அல்ல. தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக இத்தகைய யுக்தியை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையின்படி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மொத்தம் 1554 பேரை மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர். 328 பேர் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில்தான். மல்காங்கிரி ஆட்சியர் வினில்குமார் கடத்தப்பட்டது முதல் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கும் யுக்தியை மாவோயிஸ்டுகள் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக 2007-ம் ஆண்டு பிகார் மாநிலத்தின் வனப்பகுதி ஒன்றில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் 9-வது அகில இந்திய மாநாட்டில் சிறைகளில் உள்ள தங்களது இயக்கத்தினரை எந்த வகையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறையில் உள்ளோரை மீட்பதற்காகவே நிதியையும் மாவோயிஸ்டுகள் உருவாக்கி உள்ளனர்.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் எதிர்தாக்குதல் நடவடிக்கைகள் மாவோயிஸ்டுகளுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதாலே ஒவ்வொரு கடத்தலின் போதும் தங்களுக்கு எதிரான "பசுமை" வேட்டை நடவடிக்கையை நிறுத்தியாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

வெளிநாட்டு அமைப்புகளுடன் கை கோர்ப்பு

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் வடகிழக்கில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இதற்குக் காரணமாக சொல்லப்படுவது மாவோயிஸ்டுகள் அண்மையில் தெற்காசிய அளவிலான மாவோயிஸ்டு இயக்கங்களின் கூட்டமைப்பில் இணைந்திருக்கிறது என்பதுதான். இந்த அமைப்பில் வங்கதேசம் போன்ற பக்கத்து நாடுகளின் மாவோயிஸ்டு அமைப்புகளும் இணைந்திருக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரையில் வேலியிடப்படாத எல்லைகள் வங்கதேசத்துடனும் பர்மாவுடனும் உண்டு. இதனால் எளிதில் மாவோயிஸ்டுகளுக்கான ஆயுதங்கள் கிடைக்கக் கூடிய இடமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவாகி உள்ளன. மேலும் மாவோயிஸ்டு அமைப்பானது துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் செயல்படக் கூடிய மாவொயிஸ்டு இயக்கங்களுடன் கை கோர்த்திருப்பதால் நாட்டின் உள் மாவட்டங்களில் எத்தனை நெருக்கடியும் பசுமை வேட்டை நடவடிக்கை தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநிலங்கள் அவர்களுக்கு கை கொடுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்க உள்ளன.

நாட்டின் 9 மாநிலங்களில் 83 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற மாவோயிஸ்டுகள்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான ஒரே அச்சுறுத்தல் என்று தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் கூறிவருகிறார். இருப்பினும் தொடரும் கடத்தல் சம்பவங்களும் விரியும் மாவோயிஸ்டுகளின் எல்லைகளும் நாடு மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலை சந்திக்க இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக