வெள்ளி, ஏப்ரல் 20, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல்- ஒபாமா, ரோம்னி இடையே கடும் போட்டி: கருத்துகணிப்பு முடிவு


வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி்ககும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுவது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்டது. குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட மிட் ரோம்னி, ரிக் சான்டோரம், கிங்ரிச் மற்றும் ரான் பால் ஆகியோர் களத்தில் உள்ளனர். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. 

இதில் பெரும்பாலான இடங்களில் மிட் ரோம்னி வெற்றி பெற்று வருகிறார். இதற்கிடையே ரோம்னிக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வந்த ரிக் சான்டோரம் களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் டைமஸ்/சிபிஎஸ் நியூஸ் நடத்திய கருத்துகணிப்பில் 47 சதவீதம் பேர் ஒபாமாவுக்கும், 44 சதவீதம் பேர் ரோம்னிக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதற்கிடையே ரோம்னி தான் எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ஒபாமாவை மூட்டை, முடிச்சுகளை கட்ட ஆரம்பிக்குமாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக