புதன், ஏப்ரல் 18, 2012

காஸ்மி விவகாரம்:பிரதமர் தலையிட உ.பி முதல்வர் அகிலேஷ் கோரிக்கை!


லக்னோ:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பில் அநியாயமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது காஸ்மியின் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிரதமரை அவரது ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் சந்தித்து ஒரு மணிநேரம் உரையாடிய அகிலேஷ் யாதவ் அவ்வேளையில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
காஸ்மியின் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக, தனிப்பட்ட ரீதியில் தலையிடவேண்டும் என்று கோரிக்கை வைத்த அகிலேஷ், கார் குண்டுவெடிப்பு தொடர்பாக காஸ்மியின் கைது குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வது அவர்களை தனிமைப்படுத்தும் தவறான போக்கு என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் நேரடியாக உணர்த்துமாறும் கோரிக்கை வைத்தார்.
முன்னர் முஸ்லிம் அறிஞர் மவ்லானா கல்பேஜவ்வாத் காஸ்மியின் கைதை எதிர்த்து ஏப்ரல் 15-ஆம் தேதி ரெயில் ரொகோ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனையை தனது மகனும், உ.பி மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவின் கவனத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் கொண்டு சென்று பிரதமரை சந்திக்கும் வேளையில் இப்பிரச்சனையை எழுப்புமாறு அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அகிலேஷ் பிரதமரை சந்தித்த வேளையில் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
காஸ்மியின் அநியாய கைதை கண்டித்து பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக