கோலாலம்பூர்:தேர்தல் சீர்திருத்தம் கோரி, மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பேரணியில், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், தேர்தல் சீர்திருத்தம் கோரி, எதிர்க்கட்சிகள் ஆதரவுடன், "பெர்சி' (மலேய மொழியில், "சுத்தமான' என்று பொருள்) என்ற தன்னார்வ அமைப்பின் தொண்டர்கள், சுதந்திர சதுக்கத்தில் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர்.
தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும், தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.பேரணிக்கு, நகர நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. வேறு பகுதிகளில் பேரணி நடத்த, அதன் அமைப்பாளர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், திட்டமிட்டபடி, நேற்று காலை பேரணி நடத்த, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சுதந்திர சதுக்கம் அருகே திரண்டனர். இவர்களில், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் என, பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், சில இணையதள செய்திகளில், இந்த எண்ணிக்கை, 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பேரணி நடத்த தடை விதிப்பதிருப்பது குறித்து, போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, பேரணிக்கு வந்தவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர்.இருப்பினும், அவர்கள் அங்கிருந்து கலையாமல் இருந்ததை அடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், அவர்களை விரட்டி அடித்தனர். "பெர்சி' அமைப்பின் தலைவரும், இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞருமான எஸ்.அம்பிகா, சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில், தொண்டர்களை சந்தித்து பேசினார்.
அதேபோல், சில குறிப்பிட்ட பகுதிகளில், பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூடி பேசினர். இதையெல்லாம், போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.பேரணியை தடுக்க, நேற்று முன்தினமே, மலேசிய அதிகாரிகள் பல முக்கிய பகுதிகளை, "சீல்' செய்து விட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி, 20 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக