டெல்லி: உலக அளவில் சக்திவாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியையும் டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை உள்ளடக்கி மூன்றாவது அணி அமையுமா என்று ஊடகங்கள் யூகித்து வரும் நிலையில் மோடியின் இந்த வாழ்த்தும் கூட அரசியல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சி பஞ்சாபில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மாநில முதல்வராக பிரகாஷ்சிங் பாதல் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மமதா பானர்ஜியும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போதே காங்கிரஸ் கொஞ்சம் கலங்கிப்போயிருந்தது.
ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் சிறிதுகாலம் கை கோர்த்துக் கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. கிழக்கு கடற்கரையோர மாநிலங்களான மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திரா, தமிழகம் ஆகியவற்றில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து 'ஈசிஆர்" கூட்டணி அமைக்க ஒரிசாவின் நவீன்பட்நாயக்கோடும் நட்பு பாராட்டினார்.
இப்போது பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே நேரடியாக மமதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பது தமது அணியிலிருந்து எங்கே திரிணாமுல்காங்கிரஸ் கழன்றுவிடுமோ என காங்கிரஸை கதிகலங்கச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக