வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை தரக் கோரி சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தற்போது ஜாமீனில் இருக்கும் ராஜகோபால், சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், என் மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன்.
எனது 2 கால் மூட்டுகளிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனவே வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள எனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு நான் அதை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் எம்.பிரபாவதி வாதிடுகையில், "ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான மேல்முறையீடு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
எனவே அந்த வழக்கு தொடர்புடைய கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்திலேயே முறையிடலாம். இந்தியாவிலும் வெளிநாடுகளைப்போல் நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சதாசிவம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக