கொழும்பு:இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும் முயற்சியை நிறுத்தாவிட்டால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் என்று நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தம்புள்ளையில் உள்ள மஸ்ஜித் மீது வெடிக்குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மறு நாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்காக சென்றபோது புத்த பிக்குகள்(சாமியார்கள்) அராஜகமாக தடுத்தனர். ‘மஸ்ஜிதை மூடாவிட்டால் இடிப்போம்’ என மிரட்டல் விடுத்தனர்.
தம்புள்ளை பகுதி, புத்தர்களின் புனித இடம் என்று கடந்த 1982-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் ஏதும் கட்டப்படக் கூடாது; இங்கு அனுமதியில்லாமல் மஸ்ஜித் கட்டப்பட்டிருக்கிறது என்று புத்த பிக்குகள் திமிர்த்தனமாக கூறிவருகின்றனர்.
ஆனால், மஸ்ஜித் 50 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகவும், அது சட்டப்பூர்வமானது என்றும் முஸ்லிம்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், புத்த பிக்குகளை கலைந்து போகச் சொல்வதற்குப் பதிலாக, மஸ்ஜிதிலிருந்து வெளியேறிவிடுமாறு முஸ்லிம்களிடம் கூறியிருக்கின்றனர். இதன் பிறகு மஸ்ஜித் மூடப்பட்டு, அங்கு போலீஸ் காவல் போடப்பட்டது.
இதையடுத்து, மூத்த அமைச்சர் ஏ.எச்.எம். ஃபவ்ஸி மற்றும் துணை அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் தம்புள்ளையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மஸ்ஜிதை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், மத விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான ஜெயரத்னா, கொழும்பு நகரில் முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம பேசிய அவர், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், பிரதமரின் இந்தக் கருத்தை அமைச்சர் ஃபவ்ஸி மறுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதை மேற்கு மாகாண ஆளுநர் ஆலவி மெளலானா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் நேற்று(திங்கட்கிழமை) நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவது பற்றிய தீர்மானத்தை பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம் மத தலைவர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக