சனி, ஏப்ரல் 21, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை: ஆராய்ச்சியாளர் நீரஜ் ஜெயின் பேட்டி


இந்தியாவின் புகழ்பெற்ற அணுஉலை ஆராய்ச்சியாளரும், பொறியாளருமான நீரஜ் ஜெயின் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின்போது நீரஜ் ஜெயின் கூறியதாவது:- 
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை கூடங்குளம் அணுஉலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய். 

அணுஉலைகள் இரண்டும் கூடங்குளத்தில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையில் 10 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

கூடங்குளம் அணுஉலைகளில் தற்போது நிறுவப்பட்டுள்ள உலைகளின் உற்பத்தி திறன் 2000 மெகாவாட்.கூடங்குளம் 2 அணுஉலைகளிலும் 1000 மெகாவாட் மின்உற்பத்தியாகிறது என்றால், அணுஉலையானது தன் சொந்த தேவைக்கு 10 சதவீதம் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 900 மெகாவாட் மின்சார உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 30 லிருந்து 40 சதவீதம் மின்சாரம் அளிக்கிறார்கள். 

இதில் 20 சதவீதம் மின்கடத்தல் மூலம் நஷ்டம் அடையும். அந்த 20 சதவீத்தையும் கழித்தால் மீதி 20 சதவீதம் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.அப்படியென்றால் மொத்தம் 290 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கும். 

தமிழகத்திற்கு தற்போது 3500 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது. இதில் 290 மெகாவாட் மின்சாரம் எவ்வளவுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் 2 அல்லது 3 மாதங்களில் அனல் மற்றும் காற்று மூலம் தமிழகத்தில் 6000 மெகாவாட் மின்உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 

இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்யும் கூடங்குளம் அணுஉலை தேவை இல்லை. மேலும் அந்த உலையை சுற்றி உள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த உலையால் பாதிப்படையவுள்ளனர். இந்த உலை செயல்படத் தொடங்கினால் அதில் இருந்து வெளியேறும் கதிரியக்க கழிவுகளால் அந்த பகுதி மக்கள் கடும் நோய்களுக்குள்ளாவார்கள். 

கூடங்குளம் அணுமின் உலை திட்டத்தை உடனே கைவிட வேண்டும். . ஆற்றலை சேமிப்பதற்கும், மீட்டெடுக்கவும் கூடிய தொழில்நுட்பத்தை வளர்க்க போதிய முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன், டாக்டர்.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக