திங்கள், ஏப்ரல் 30, 2012

இலங்கை மஸ்ஜித் இடிப்பு: கருணாநிதி கண்டனம்!

சென்னை:இலங்கையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:
இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மஸ்ஜித் ஒன்றினை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்து நாசம் செய்திருக்கின்றனர்.

மஸ்ஜிதை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக மாற்ற இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர். இலங்கை முழுவதையும் ராஜபட்ச அரசு புத்த மயமாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.
இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காகத்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அனைவரையும் விரட்டி அடித்துவிட்டு, சிங்களர்களைக் குடியேற்றுதல் மற்றும் இந்துக் கோயில், கிறிஸ்தவத் தேவாலயங்களையும் நாசப்படுத்துவது போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதுபோன்று நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. இந்த நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்துக்குரியவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக