ஃபைஸாபாத்:2007 நவம்பர் 23-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஃபைஸாபாத், லக்னோ நீதிமன்ற வளாகங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து உத்தரபிரதேச மாநில அரசு சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுள்ளதாக முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக சிக்கவைக்கப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்வோம் என்று சமாஜ்வாதி கட்சி தனது தேர்தல்
அறிக்கையில் கூறியிருந்தது.
காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி, ஸாஜ்ஜாதுர் ரஹ்மான், அக்தர் ஆகியோரை விடுவிப்பது குறித்து சட்ட ஆலோசனையை உ.பி. அரசு பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றுவோம் என்றும், பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்வோம் என்றும் அகிலேஷ் யாதவ் கூறினார்.
அயோத்தியா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்து வெற்றிவாகை சூடிய சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ தேஜ் நாராயணனுக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச்செய்ய மசோதா கொண்டுவரவும், அவர்களை கைது செய்ததற்காக இழப்பீடு வழங்கவும் முதல்வர் தீர்மானித்திருப்பதாக முன்னர் அவரது செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுதரி கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக