திங்கள், ஏப்ரல் 23, 2012

இருதயத்தை பாதுகாக்கும் இதமான காலிஃப்ளவர் !

 காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு. காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிஃப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

காலிஃப்ளவரின் சத்துக்கள்

காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6, ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

எப்படி சமைக்கலாம்?

இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும்போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.

இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.

இருதயத்தை பாதுகாக்கும்

காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும்போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக