வியாழன், ஏப்ரல் 19, 2012

ராமர் பால விவகாரம்: முடிவெடுக்க மத்திய அரசு மறுப்பு


டெல்லி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரும் சுப்பிரமணிய சாமியின் மனுவுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. 
இந்த விவகாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை 2 வாரம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த வழ்ககு நீதிபதிகள் ஹெச்.எல். தத்து மற்றும் அனில் ஆர். டேவ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடந்த முறை விசாரணையின்போது ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசிடம் பதில் பெற்று வருமாறு கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஹரின் ரவாலை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 
இந்நிலையில் இன்றைய விசாரணையில் சாமியின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவி்க்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. 
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் எண்ணம் உள்ளதா என்று கடந்த மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு பதில் அளிக்காததன் மூலம் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் எண்ணம் அதற்கு இல்லை என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுள்ளது மத்திய அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக