பி.எம்.எஸ்., கல்லூரி அட்மிஷன் நிர்வாக ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதாக, லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞருமான ஆச்சார்யா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெங்களூரு ஜெயநகரிலுள்ள, பி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும், அரசு சீட்களுக்கு நன்கொடையாக வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய், கணக்கில் காட்டப்படவில்லை. தகுதியற்ற மாணவர்களுக்கு
காலியான சீட்களை ஒதுக்கியதாகவும், இதற்கு கல்லூரி உதவிச் செயலர் பதிலளிக்க வேண்டும் என, ஜனவரி 23 ம் தேதி பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷய்யா, லோக் ஆயுக்தா நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்குத் தொடர்ந்தார்.
புகார் மனுவில், விதிமுறைகளை மீறி நன்கொடை வசூல் செய்ததற்கு உடந்தையாக இருந்ததாக, கவுன்சில் டிரஸ்டிகளான கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா, அரசு நியமனம் செய்த டிரஸ்ட் உறுப்பினர் தால்வார், உறுப்பினர் செயலர் ராகினி நாராயண், உறுப்பினர்கள் டாக்டர் தயானந்த பாய், முன்னாள் கர்நாடக கூடுதல் தலைமைச் செயலர் விஜய்கோரே ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இவர்களில் முக்கிய குற்றவாளியான தயானந்த பாய், முறைகேடாக வசூலித்த தொகையை, தனக்கு உடந்தையாக ஒத்துழைத்த காரணத்துக்காக டிரஸ்டிகளுக்கு பங்கிட்டுத் கொடுத்ததாகவும், நிர்வாகத் தலைவராக உள்ள ஆச்சார்யா, அனைத்து சலுகைகளையும் பெற்றதுடன் மோசடிகளுக்கு துணையாக இருந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆச்சார்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக வாதாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை லோக் ஆயுக்தா விசாரணை நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, வரும் 21 ம் தேதி, நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக