சனி, ஏப்ரல் 18, 2015

மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு நடத்துகின்றன.         

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.          

இதற்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி) ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.          

இதனால் இன்று பெரும்பாலான பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும், அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது. முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு கன்னட அமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஊர்வலம் நடந்தது. பெங்களூருவில் மாநகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தொடங்கி வைத்தார். பெங்களூரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.          

முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசு ஆதரவு கிடையாது என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்துக்காக இந்த போராட்டம் நடைபெற்றாலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

அசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், பாதுகாப்பு பற்றியும் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக