திண்டுக்கல் அருகே கார்-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியில், அதே பகுதியை சேர்ந்த பஜீருல்லாஹக் (வயது 32) என்பவர் போதகராகவும், பேராசிரியராகவும் இருந்து வந்தார். இவருடைய உறவினர்கள் கொடைக்கானலில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்வதற்காக பஜீருல்லாஹக், அவருடைய உறவினர்கள் மற்றும் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 9 பேர் அரவக்குறிச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு காரில் சென்றனர். காரை மோகன் (49) என்பவர் ஓட்டினார்.
இவர்கள் கொடைக்கானலுக்கு சென்று கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் அரவக்குறிச்சிக்கு புறப்பட்டனர். இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலகுண்டு மெயின் ரோடு சேடபட்டி என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தை கார் டிரைவர் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே முசிறியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற டேங்கர் லாரி மீது அந்த கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். கார் மீது மோதிய லாரியும் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் பஜீருல்லா (32), அவரது தம்பி முகமது வலியுல்லா (25), சையது இப்ராகிம் (25), அப்துல்ரகீம் (40), அப்துல்ரகுமான் (32), அபுசாலிக் (27), மற்றும் இமாம் தமிமுன் அன்சார் அலி (25), அரபிக் கல்லூரி மாணவர் அலி அகமது (20), கார் டிரைவர் மோகன் (49) ஆகிய 9 பேரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த கலீல்ரகுமான் (40) என்பவர் மட்டும் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்ததும் அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னரே போக்குவரத்து சீரானது.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. பலரது முகம் மற்றும் உடல் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதும் சிரமமாக இருந்தது. விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் செம்பட்டி பகுதியிலும், அவர்களது சொந்த ஊரான பள்ளப்பட்டியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக