புதன், ஏப்ரல் 15, 2015

டென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்கு வாழ்த்துகள் குவிகிறது

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறிய இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடந்த பேமிளி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில், பெண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி 6-0, 6-4 என்ற நேர் செட்டில் டெல்லாக்குவா (ஆஸ்திரேலியா)-தாரிஜா ஜூராக் (குரோஷியா) இணையை சாய்த்து மகுடம் சூடியது.

சானியா, ங்கிசுடன் கைகோர்த்த பிறகு தொடர்ச்சியாக பெற்ற 3-வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே இவர்கள் கூட்டாக இண்டியன்வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனிலும் பட்டம் வென்று அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், 3-வது இடத்தில் இருந்த சானியா மிர்சா இரட்டையர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். தரவரிசை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. 2-வது, 3-வது, 4-வது, 5-வது இடங்களில் முறையே இத்தாலியின் சாரா எர்ரானி, ராபர்ட்டா வின்சி, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஆகியோர் வகிக்கிறார்கள்.

டென்னிஸ் தரவரிசையில் இந்திய மங்கை ஒருவர் முதலிடத்தை பிடித்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டிய 3-வது இந்தியர் ஆவார். ஏற்கனவே லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி இச்சிகரத்தை அடைந்துள்ளனர்.

28 வயதான சானியா மிர்சா தொடர்ச்சியான காயங்களால் 2012-ம் ஆண்டு முதல் ஒற்றையர் ஆட்டங்களை துறந்து விட்டு இரட்டையர் பிரிவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது 12 ஆண்டு கால சர்வதேச டென்னிஸ் பயணத்தில் தற்போது உன்னதமான நிலையை அடைந்துள்ள அவருக்கு சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

அதன் விவரம் வருமாறு:-

பிரணாப் முகர்ஜி (ஜனாதிபதி): டென்னிஸ் இரட்டையர் தரநிலையில் முதலிடத்தை பெற்றுள்ள சானியாவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்): கடின உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பும், உறுதியான நோக்கமும் அவருக்கு இந்த எதிர்பாராத சிறப்பை பெற்று தந்துள்ளன. தனது சாதனை மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்துள்ளார்.

தெண்டுல்கர்-கோலி

சச்சின் தெண்டுல்கர் (இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்): சானியாவின் வியக்கத்தகு சாதனை. இது டென்னிஸ் விளையாட்டை மேலும் பல பேர் தேர்வு செய்ய உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

விராட் கோலி (இந்திய கிரிக்கெட் வீரர்): முதலில் சாய்னா இப்போது சானியா. இந்திய பெண்கள், விளையாட்டில் ‘நம்பர்’ ஒன் இடத்தை பிடித்து நம்மை பெருமைப்பட வைத்திருக்கிறார்கள்.

சோயிப் மாலிக் (சானியாவின் கணவர்): டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற ‘திருமதி மாலிக்’குக்கு வாழ்த்துகள். எல்லா பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பும் சானியாவுக்கு உண்டு.

சாய்னாவும் மகிழ்ச்சி

மார்ட்டினா ங்கிஸ் (சக டென்னிஸ் ஜோடி): எனது ஜோடி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவரது வெற்றிக்கு உதவியதை கவுரவமாக கருதுகிறேன்.

லியாண்டர் பெயஸ் (இந்திய டென்னிஸ் வீரர்): ‘நம்பர் ஒன்’ தரவரிசை பட்டியலில் இணைந்த உங்களை வரவேற்கிறோம். உங்களால் பெருமிதம் அடைகிறோம்.

மகேஷ் பூபதி (இந்திய டென்னிஸ் வீரர்): உச்ச நிலையை எட்டி பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். கடின உழைப்பு, தியாகம் உள்ளிட்டவற்றுக்கு கிடைத்த பரிசு இது.

சாய்னா நேவால்(இந்திய பேட்மிண்டன் வீராங்கனை): இரட்டையர் தரவரிசையில் சானியா முதலிடத்தை பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. எதிர்காலத்தில் மேலும் சாதிக்க அவருக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு கூறியுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக