வெள்ளி, ஏப்ரல் 17, 2015

ஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; கிறிஸ்தவர்கள் போராட்டம்


ஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிரதாப்பூர் பகுதியில் செயின்ட் மேரி தேவாலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு, பங்குத்தந்தை தாப்ரேயின் குருபட்ட வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழா நள்ளிரவில் முடிவடைந்தது. பின்னர் தேவாலயத்தை பூட்டி விட்டு அனைவரும் சென்றனர்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் யாரோ சில மர்ம நபர்கள் இந்த தேவாலயத்துக்கு வந்தனர். அவர்கள் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலைகளையும் சேதப்படுத்தினர். பின்னர் தேவாலயத்துக்குள் நுழைய கதவை திறக்க முயன்றுள்ளனர்.
ஆனால் கதவு திறக்காததால், ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சிலைகளை உடைக்கவும் முயன்றனர்.

இந்த நிலையில் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் தேவாலயத்துக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

அலாரம் ஒலித்ததை கேட்டு பங்குத்தந்தை தாப்ரே அங்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடியிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு வந்து கூடினர். அவர்கள் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டமும், பேரணியும் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளை கவனிப்பதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக