ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏப் – 28ல் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் நீதி பேரணிக்கு அணி, அணியாய் தமிழர்கள் திரண்டு வரவேண்டும் என SDPI கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட கொடூர நிகழ்விற்கு நீதிவேண்டி ஏப் – 28ல் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் நீதி பேரணி வெற்றி பெற்றிட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்துகின்ற இப்பேரணியில் சென்னை குலுங்கிடும் அளவிற்கு தமிழர்கள் திறண்டிட வேண்டும் என SDPI கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை கடத்தும் கொள்ளைக்கும்பல் ஆட்சியாளர்களின் உதவியோடும் அரசியல்வாதிகள் – அதிகாரிகளின் துணையோடும் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் இந்த மாஃபியா கும்பலை விட்டு விட்டு ஒன்றுமறியா தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளது ஆந்திர காவல்துறை.
நடைபெற்ற மோதலில்தான் அவர்கள் சுட்டுகொல்லப்பட்டார்கள் என்கிறது ஆந்திர அரசு. ஆனால் முந்திய தினங்களில் கைது செய்து அவர்களை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்று வனப்பகுதியில் அவர்களது சடலங்களை வீசி, பிறகு பெரும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது ஆந்திர காவல்துறை. இதற்கான உறுதி படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் உள்ளன.
நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க கூட ஆந்திர அரசு தயாராக இல்லை. மீண்டும் சுட்டுக் கொல்வோம் என்கிறார் ஆந்திர அமைச்சர் கொலை வெறியோடு. கண்டிப்பதற்கு தமிழக அரசும் தயாராக இல்லை. அறிக்கை கேட்டதோடு தன் கடமையை முடித்து விட்டது மத்திய அரசு. நிவாரணத் தொகை வழங்கி இறங்கல் வெளியிட்டதோடு தமிழக அரசும் தனது பொறுப்பை முடித்துக் கொண்டது.
காக்கை, குருவிகளை கூட கொல்லக் கூடாது என்று சட்டமிருக்க வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் சாவுக்கு நீதி எங்கே? தமிழனின் உயிரின் மதிப்பு இதுதானா? எனவே நடைபெற்ற கொலை சம்பவத்தை சி.பி.ஜ விசாரித்திட வேண்டும். சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆந்திர அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆந்திர அரசை கண்டித்தும் தான் ஏப் – 28ல் சென்னையில் தமிழர் நீதி பேரணி நடைபெறுகிறது.
எனவே இப்பேரணியால் சென்னை குலுங்கட்டும். மத்திய, மாநில அரசுகளின் செவிப்புலன் திறக்கட்டும். தமிழர்களின் நீதிக்குரல் திக்கிட்டும் ஒலிக்கட்டும். கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதியும், நியாமும் கிடைக்கட்டும்.
எனவே அணி, அணியாய் தமிழர்கள் திரண்டு வரவேண்டும் என SDPI கட்சியின் சார்பாக அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக