சனி, ஏப்ரல் 04, 2015

5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு

பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ந் தேதி எங்கள் அமைப்பின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. அன்று ஒற்றுமை ஊர்வலம் நடத்துவது வழக்கம். கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமநாதபுரத்தில் இதுபோன்ற ஒற்றுமை ஊர்வலம் நடத்த முறையாக போலீசில் அனுமதி பெறப்பட்டது.

ஆனால், போலீசார் வேண்டுமென்ற சில பிரச்சினை ஏற்படுத்தி, ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான எங்கள் அமைப்பு தொண்டர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில் பல அப்பாவி இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அதேபோல, போலீசார் சிலரும் காயமடைந்தனர்.இதன் பின்னர், எங்கள் அமைப்பை சேர்ந்த பலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். எங்களது வழக்கை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 17–ந்தேதி எங்கள் அமைப்பின் நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக அமைதி ஊர்வலம் செல்ல அனுமதிக் கேட்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் நாங்கள் கொடுத்த அனுமதி மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் தவறான தகவலை இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவித்தார்.அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஒற்றுமை ஊர்வலத்தில் கலவரம் நடந்ததாகவும், அதில் 4 இந்துக்கள், ஒரு முஸ்லிம் என்று 5 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அட்வகேட் ஜெனரல் மூலம் போலீஸ் கமிஷனர் கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் இப்படி 5 பேர் கொலை செய்யப்பட்டதாக எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் பொய்யான தகவலை இந்த கோர்ட்டுக்கு தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க விடாமல் போலீஸ் கமிஷனர் தடுத்து விட்டார்.

இதனால், எங்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்காக செலவு செய்த ரூ.8 லட்சம் வீணாகி போனது. பொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக